Tamilnadu

"படித்த இளைஞர்களுக்கு உலகத்தர திறன்களை வழங்குவோம்.." - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் !

தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் இ-ஆபிஸ் மற்றும் இ-சேவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கொல்லிமலையில் எளிதான இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சாமானிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மின்-அலுவலகத் திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் மக்களைத் தேடி அரசு சேவைகள் உடனுக்குடன் கிடைக்கும். கோரிக்கை மனுக்களின் அன்றாட நிலவரத்தை கண்டறிந்து விரைவான சேவைகளை தரவுகளின் அடிப்படையில் வழங்க முடியும்.

மேலும் அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். அதோடு இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசின் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் படிப்படியாக அரசின் அனைத்துத் துறை சேவைகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும்.

வளரும் மாவட்டங்களில், படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதனடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். தமிழ்நாடு அரசு அறிவித்தது போல ஸ்மார்ட் கவர்னன்ஸ் என்பதை உள்ளடக்கி மின்- அலுவலக திட்டங்களை இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும். முதற்கட்டமாக, அரசின் தலைமைச் செயலகத்தில் 3,645 பேருக்கு மின் அலுவலக பயிற்சி வழங்கி முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலையில் எளிதான இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பியுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இத்துறை 16-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.

IT HUB என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தி, படித்த இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்தி எதிர்காலத்தில் அவர்கள் உலக தரத்திலான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன்களை தகவல் தொழில்நுட்ப துறை வழங்கவுள்ளது" என்று தெரிவித்தார்.

Also Read: கலைஞருக்கான பூம்பொழில் இல்லம் சட்டப் பல்கலைக்கழகமாக மாறியது எப்படி?.. மாணவர்களுக்கு நினைவூட்டிய முதல்வர்!