Tamilnadu

youtube views அதிகரிப்பதற்காக அரசு குறித்து தவறான thumbnail வைத்த இளைஞரை கைது செய்த தமிழக காவல்துறை !

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகிரெட்டிப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகனான ஜனார்த்தனன் என்ற 22 வயதுடைய இளைஞர். இன்ஜினீரிங் படித்து முடித்து விட்டு தற்போது ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

சமீபகாலமாக Youtube சேனல் தொடங்கி வீடியோ பதிவு செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இவரும் தனக்கென தனியாக Youtube சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.

இவர் பல்வேறு பிரபல தமிழ் செய்தி சேனல்களின் யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்து, அதனை தனது சேனலில் பயன்படுத்தி அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பி வந்துள்ளார். மேலும் இதன்மூலம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நேற்று ஜனார்த்தனனின் ஊருக்கு வந்து அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், யூடியூப் வீடியோக்களில் வியூஸ்களை அதிகரிக்க இப்படி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரது வீடியோ முகப்பில் (Thumbnail) பொய்யான தகவல்களை வியூஸ்களை அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்தது.

அரசு பற்றி அவதூறு பரப்பி அதன்மூலம் யூடியூப் வீடியோக்களில் வியூஸ்களை ஏற்றி வந்த ஐ.டி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காற்றடிக்கும் கருவியால் வந்த வினை.. நண்பன் செய்த செயலால் பறிபோன சக நண்பனின் உயிர் : ம.பி-யில் அதிர்ச்சி !