Tamilnadu
காதலன் வீட்டில் தகராறு செய்த காதலி.. தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய இளம்பெண் கைது.. என்ன நடந்தது ?
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராகவேந்திரகுமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயம் நடந்துள்ளது.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டில், 5 பவுன் தாலி, இருசக்கர வாகனம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கேட்டுள்ளனர். ஆனால் பெண் வீட்டில் தர மறுத்ததால் அவர்கள் திருமணத்தை நிறுத்தினர். இதனால் கோபமடைந்த செல்வி, காதலன் ராகவேந்திரகுமார் வீட்டிற்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை திருவொற்றியூரில் உள்ள காதலன் ராகவேந்திரகுமார் வீட்டிற்கு சென்ற செல்வி, அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ராகவேந்திரகுமார் குடும்பத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு தலைமை காவலர் மற்றும் காவலர் ஆகிய இருவரும் விரைந்து வந்தனர்.
அப்போது அங்கு கோபத்தில் கத்திக்கொண்டிருந்த செல்வியை இருவரும் சமாதான படுத்த முயன்றனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும் அறிவுறுத்தினர். ஆனால் 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது போல கோபத்தில் இருந்த செல்வி யார் பேச்சையும் கேட்கவில்லை. அதோடு சமாதானப்படுத்த முயன்ற காவலரின் சட்டையை கிழித்து தகராறு செய்துள்ளார். அதோடு தலைமை காவலரின் கையையும் கடித்துள்ளார்.
இதையடுத்து செல்வியை காவல் நிலையம் அழைத்து வந்த காவலர்கள், காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், தாக்கிய குற்றத்திற்காகவும் அவர் மீது திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!