Tamilnadu

"பிள்ளைகளிடம் ஆசைகளை திணிக்காதீர்கள்": பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.8.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

பெற்றோர்கள், தங்களது ஆசைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம். வழிகாட்டலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் திணிக்கக் கூடாது. அப்பா, அம்மாவின் ஆசைக்காக மட்டும் சேரும் பிள்ளைகள் - பின்னர், மனதளவில் சோர்வடைகிறார்கள். அவர்களால், முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தங்களது பிள்ளைகளுக்கு, எந்த மாதிரியான படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு, அதில் படிக்க வையுங்கள். பல்வேறு படிப்புகளைக் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காகத்தான், ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சியை நம்முடைய அரசு தொடங்கி இருக்கிறது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் - ‘கல்லூரிக் கனவு’ என்ற பெயரில், 25.06.2022 அன்று, தமிழக அரசு ஒரு விழாவை சிறப்பாக நடத்தியது. அந்த விழாவை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நான் தொடங்கி வைத்தேன். பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் அதில் பங்குபெற்று, ஒவ்வொரு துறையின் சிறப்புகளை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இந்த விழாவில், ஆயிரக்கணக்கான +2 முடித்த மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கு பெற்றது உண்மையிலே எனக்கு நிறைவாக இருந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர், விழா முடிந்து வெளியில் செல்லும்போது, நாம் எந்தத் துறையை தேர்வு செய்து மேற்படிப்புக்குச் செல்லலாம் என்ற தீர்க்கமான முடிவுடன் செல்லும் வகையில் அரசு அந்த விழாவை நடந்தது என்பதை நான் பெருமையோடு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நான் அடிக்கடி பேசுவது, நம் தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள், அவர்கள், வேறு எந்த மாநில மாணவியருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதைபோல்தான் இப்போதும் சொல்கிறேன், உறுதியாகக் கூறுகிறேன். நம் இளைஞர்கள், திறமையில் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், இவர்களுக்குத் தேவை, சிறந்த வழிகாட்டி மற்றும் உந்து சக்தி ஆகியவைதான். இவற்றை வழங்கினால், இவர்களின் திறமை இன்னும் பளிச்சிடும். அதன் மூலம், வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பதை நன்கு நான் உணர்ந்த காரணத்தினால் “நான் முதல்வன்” திட்டத்தை நான் தொடங்கினேன்.

இன்று அறிமுகப்படுத்தியிருக்கக்கூடிய, “நான் முதல்வன்” இணையதளம் இந்த நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது. இந்த இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தும்போது, தெளிவான, சீரான தகவல்களை நிச்சயமாகப் பெற முடியும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: உலகின் முக்கிய பொறுப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அமர வேண்டும்.. தனது ஆசையை வெளிப்படுத்திய முதலமைச்சர்!