Tamilnadu
“ஊட்டியில் தங்குவதால் உயிருக்கு ஆபத்து..” : கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சியங்களைக் கலைத்து, ஆதாரங்களை அழித்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங்கிய நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், இருவரும் ஊட்டியிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஊட்டியில் தங்குவதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரர்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ஆம் தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனைகளை தளர்த்தி உள்ளார்.
மேலும், நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க கூடாது காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!