Tamilnadu

மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி ? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 'தாலிக்கு தங்கம்' திட்டத்திற்கு பதிலாக, அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவியருக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி வழிகாட்டித் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், "அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதில் இன்று முதல் வரும் 30-ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து உடனடியாக இந்த இணையதளத்தில் மாணவிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

இதற்காக இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை ஒவ்வொரு கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்து அனுப்ப வேண்டும். ஓ.டி.பி. அனுப்பப்படும் என்பதால் மாணவிகள் செல்போனை தவறாது கொண்டு வர வேண்டும். மாணவிகளும் தாங்களாகவே இதை பதிவேற்றம் செய்யலாம்.

அனைத்து விவரங்களும் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆத்திரத்தில் மனைவியை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கணவன்.. சம்பவத்தின் பின்னணி என்ன?