Tamilnadu
மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.
அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் இராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.
மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!