Tamilnadu

16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கும்பல் - வழக்கில் சிக்கிய மருத்துவமனைகள் : பின்னணி என்ன?

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை தமிழகத்தின் பல மாவட்டங்களில் விற்பனை செய்ய தன்னை ஆட்படுத்தியதாக சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் சிறுமியின் தாயார் சுபையா , சுப்பையாவின் இரண்டாவது கணவர் சையத் அலி, இந்தக் கரு முட்டையை விற்பதற்கு இடைத்தரகராக செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் வயதை கூடுதலாக ஆவணங்களில் மாற்றிய ஜான் உட்பட நால்வர் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று சூரம்பட்டி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோட்டில் செயல்படும் பிரபல மருத்துவமனை மற்றும் பெருந்துறையை சேர்ந்த மற்றொரு மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலிஸார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இடையே விசாரணையை நடத்தி முடித்த நிலையில் இன்று மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் விசாரணை செய்தனர்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈரோட்டைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையில் மருத்துவர் விஸ்வநாதன், கதிரவன், கோமதி, மலர்விழி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு கருமுட்டையை வழங்குவதற்காக வந்த பதிவேடுகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் சான்றுகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்தனர். இந்த நிலையில் 4 மணி நேர விசாரணை முடிந்து தற்போது பெருந்துறையில் செயல்படும் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர்.

Also Read: “தி.மு.க அரசை கட்டுப்படுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு நினைக்கிறது.. அது ஒருபோதும் நடக்காது” : முத்தரசன் பேச்சு!