Tamilnadu

கடற்கரை மணலில் புதைத்து சாராய விற்பனை.. அடுத்தடுத்து சிக்கிய மராட்டிய கும்பல்.. மெரினாவில் நடந்தது என்ன?

சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த மே 15 அன்று காலை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் கண்காணித்த போது, அங்கு 3 பெண்கள் ரகசியமாக சாராயம் போன்ற திரவ பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

கைதான கீதுஸ் கோஸ்லயா (30), சுனந்தா (65), சில்பா (29) மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருக்கிறது. அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயம் போன்ற போதை தரும் திரவ பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (17.05.2022) அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, கண்ணகி சிலை பின்புறமுள்ள மணற்பரப்பில் சந்தேகப்படும்படி இருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சாராயம் போன்ற போதை தரும் பொருளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிப்பட்ட நபர் விஷால் வினோத் பவாரும் (19) மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், கண்ணகி சிலை பின்புறமுள்ள மணற்பரப்பில் மணலுக்கடியில் சாராயம் போன்ற போதை தரும் திரவ பொருளை புதைத்து வைத்து, ரகசியமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதன்பேரில், விஷால் வினோத் பவார் கைது செய்யப்பட்டு, அவர் கடற்கரை மணற்பரப்பில் மணலுக்கடியில் புதைத்து வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் போன்ற திரவ பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், இவர்கள் மெரினா கடற்கரையில் தங்கி வருவதும், மேலும் இவர்கள் ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டைக்கு சென்று மேற்படி சாராயம் போன்ற திரவ பொருளை வாங்கி யூனிட் இரயிலில் மறைத்து எடுத்து வந்து சிறு சிறு பாட்டில்களில் அடைத்து, மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறமுள்ள மணற்பரப்பில் மணலுக்கடியில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஷால் வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மெரினா கடற்கரையில் நடந்த அத்தகைய சட்டவிரோத செயல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மீண்டும் நிகழாமல் இருக்க தொடர் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் போன்ற போதை தரும் திரவத்தின் மாதிரி, தடய அறிவியல் துறைக்கு (Forensic Science Lab) பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை.. ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த காதலி!