Tamilnadu

INSTAGRAM பயன்படுத்த பெற்றோர் எதிர்ப்பு : காணாமல் போன சிறுமியை சாதுர்யமாக மீட்ட போலிஸ் - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அந்த மாணவிக்கு பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் மாணவி இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்துவதை அறிந்த பெற்றோர், அவரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தக் கூடாது எனக் கண்டித்துள்ளனர்.

இந்தநிலையில் விரக்தியடைந்த மாணவி திடீரென காணமால் போனார். எங்கு தேடியும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக காட்டியுள்ளது. இதனைக் கண்டுபிடித்த போலிஸார் மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருக்கும் ஒரு தோழி மூலமாக வீடியோ கால் செய்துள்ளனர். அப்போது அவர் செல்போனை ஸ்விடச் ஆப் செய்துவிட்டு WiFi மூலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியுள்ளார். அதில் மாணவி காட்பாடி அருகே முன்பதிவு செய்யப்படாத ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் கோவையில் இருந்து காட்பாடிக்கு செல்லும் கோவை - சென்னை விரைவு ரயிலின் புறப்படும் நேரம், சென்றடையும் நேரத்தை கணித்துள்ளனர். பின்னர் அனைத்து ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் மாணவியின் அடையாளத்தையும், புகைப்படத்தையும் கோவை காவல் துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் முன்பதிவுவில்லாத பெட்டியில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த மாணவியை மீட்டு, கோவை அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு போலிஸார் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்ப்பட்டதாகவும், பெற்றோர் கண்டித்ததால் அவருடன் தங்குவதற்காக சென்னை சென்றதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர், மாணவிக்கு அறிவுரைக் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: “தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு THE WEEK பாராட்டு!