Tamilnadu

பெண்கள் பாதுகாப்புக்காக பேருந்துகளில் பேனிக் பட்டன்.. வழிகாட்டுதல்களை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பதை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள், 4 அவசரகால அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசவுகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய நிகழ்வுகளின்போதும் அவசர கால அழைப்பு பொத்தானை அழுத்தி தகவல் / எச்சரிக்கை தர வேண்டும்.

பேருந்தின் நடத்துனர் பேருந்தினுள் இந்த ஒலி ஏற்படும் போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து, அதற்குத் தக்கவாறு காவல்துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் நிர்பயா உதவிமைய கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள்.

Also Read: INSTAGRAM பயன்படுத்த பெற்றோர் எதிர்ப்பு : காணாமல் போன சிறுமியை சாதுர்யமாக மீட்ட போலிஸ் - நடந்தது என்ன?