Tamilnadu

"அண்டை நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்காமல் உதவியதற்கு நன்றி".. முதல்வருக்கு இலங்கை பிரதமர் கடிதம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது ஒருமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலம் இலங்கைக்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் உதவ முன்வரலாம் என அறிவித்திருந்தது தமிழ்நாடு அரசு. அதன்படி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இலங்கை மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி அதற்கான காசோலையையும் கொடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்புக்கு இந்தியாவை தாண்டி பல நாட்டு மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் பாராட்டப்பட்டதோடு, பெருமளவில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள கடிதத்தில், "தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கு இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "வணிகர்களின் நலனை பேணும் அரசாக எப்போதும் தி.மு.க அரசு திகழும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!