Tamilnadu
“விஷயத்தை கேள்விப்பட்டு துடிதுடித்து போனேன்”: உயிரிழந்தோர் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் உருக்கம்!
“கோயில் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.” என தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழாவின் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த களிமேடு கிராமத்தில் நடந்த ஒரு திருவிழாவின்போது, நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்துள்ளது. இந்தத் துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. இன்று விடியற்காலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வேதனையடைந்தேன், துடிதுடித்துப் போனேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். அதைத்தொடர்ந்து இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகர், நீலமேகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், அரசு அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடவும், அரசின் சார்பில் நிவாரணப் பணிகள் எல்லாம் எப்படி நடந்துகொண்டுள்ளது என்பதை கண்காணிக்கும்படி நான் உத்தரவிட்டு அனுப்பி வைத்தேன்.
இன்று காலை சட்டப்பேரவையில் உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, நடந்த சம்பவம் குறித்து பேரவையில் எடுத்துக்கூறி, அதன்பின் விமானம் மூலம் மதுரை வழியாக தஞ்சை வந்து, நான், அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அரசின் சார்பில் ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். இந்த தஞ்சை மண்ணின் மைந்தன் என்ற முறையில் அவர்களது துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக உடனடியாக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்க ஆணையிட்டு, அதை வழங்கிவிட்டுத்தான் வந்தேன். அரசு சார்பில் மட்டுமல்ல தி.மு.க சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினேன். அதேபோல் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, அவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.
மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவித்து அந்த தொகைகளையும் வழங்கினேன். அதேபோல் திமுக சார்பில் காயமடைந்த அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்த விபத்து என்பது, நம் அனைவருக்கும் ஒரு துயரத்தை உருவாக்கியிருந்தாலும், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். விபத்துக்கான சரியான காரணத்தை அறியவேண்டும், வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுத்தாக வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ்-ஐ நியமித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை காரணமாக பயன்படுத்திக் கொண்டு, இதை அரசியலாக்க சிலர் விரும்புகின்றனர். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இதில் எல்லாம் அரசியல் பார்க்கக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். போற்றுவார், தூற்றுவார் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. மக்களுக்கு துயரம் ஏற்படாமல் காக்கவும், அதையும் மீறி இதுபோன்ற துயரங்கள் ஏற்படும்போது அந்த துயரங்களில் இந்த அரசு பங்குபெறுவது, மக்களோடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய இலக்கு. அதை நோக்கியே நான் பயணிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!