Tamilnadu

“கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள் உடனடி நடவடிக்கை” : அமைச்சரை வியந்து பாராட்டிய எம்.எல்.ஏ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் தாமதங்கள் களையப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்த விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, கோரிக்கை மனு அளித்தார்.

37D- வழித்தட பேருந்து மீண்டும் இயக்கவும், 11G 17D,13A,5E, பேருந்து வழித்தடத்தை கூடுதலாக இயக்கவும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோயம்பேடு பூ மார்க்கெட் அருகில் பேருந்து நிறுத்தத்தை யும் மேலும் 70C பேருந்தை கூடுதலாக இயக்கவும், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு கலைஞர் கருணாநிதி நகர் வடபழனி பேருந்து பணிமனை ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், அவரது மனு மீது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, இன்றே கோயம்பேடு பூ அங்காடி அருகில் பேருந்து நின்று மக்களை ஏற்றிச் சென்றுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த விருகம்பாக்கம் தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அமைச்சருகு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களிடம் 70C பேருந்து குறித்து மனு வழங்கினோம். அதன் அடிப்படையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோயம்பேடு பூ அங்காடி அருகில் பேருந்து நின்று செல்ல 24 மணி நேரத்தில் வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ட்விட்டரில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை.. உடனடி REPLY கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!