Tamilnadu

“குறைபிரசவ குழந்தைகளை பெற்றவர்கள், பேணுபவர்களின் வலியும் வேதனையும் தெரியுமா?”: சிசுநல மருத்துவர் கண்டனம்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடிஜி-க்கு நான் ஒரு ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இதையடுத்து பாக்யராஜின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிசு நல மருத்துவரும், தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளருமான சஃபி.மீ.சுலைமான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்களே..!பிரசவிக்கும் தாய் 37 வாரங்கள் முடியும் முன்னர், பல மருத்துவ காரணங்களால், தவிர்க்க முடியாத மருத்துவச் சூழலால் பிறக்கும் ஓர் குழந்தை தான் குறைமாத அல்லது குறைபிரசவ குழந்தை என்போம்!

பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக 13% குறைமாத குழந்தைகளாக இருக்க வாய்ப்பு உண்டு! வழக்கமாக முழுமையான மாதங்கள் பூர்த்தியடைந்து பிறந்த குழந்தைகளை விட இந்த குறைமாத சிசுக்கள் தான் பெரும் போராளிகளாக இருக்கும் என்பது தெரியுமா? எங்களுக்குத் தெரியும்!

அவர்களுடைய மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்துமே தமக்கான உயிர் போராட்டத்தில் ஒவ்வொரு வினாடியும் மிக தீவிரமாக இருக்கும்.

சிசு மருத்துவ நிபுணர்களான நாங்கள் தரும் சின்னஞ்சிறு ஊக்க மருத்துவங்கள் மட்டுமே பல நேரங்களில் போதும். சில சிசுகக்ளுக்கு வெண்ட்டிலேட்டர் உதவி வரை தேவைப்படும். பெரும்பாலும் அவர்கள் தாமாகெவே போரிட்டு தம் உயிரை காத்துக்கொள்ள முயல்வர்!

தாய்ப்பால் குடிக்கும் நேரம் வரை தான் மருத்துவ கண்காணிப்பில் அந்த குழந்தைகள் எங்கள் வசம் இருக்கும். அந்த குழந்தைகள் அதன் பிறகு முழுமையான பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைவிட மிக சுட்டியாகவும், படிப்பில் சிறந்த குழந்தையாகவும், நுண்ணறிவில் மிகச்சிறந்த குழந்தையாகவும் வளரும்!

என் அனுபவத்தில் 26 வாரத்தில் பிறந்த 690 கிராம் எடை உள்ள குழந்தையைக் கூட காப்பாற்றி இருக்கிறோம். இப்போதும் என்னிடம் அக்குழந்தை எனக்கு ஒரு நண்பனாக இருந்து வருகிறது.

பொதுவாக நாம் அனைவரும் வளர்ந்த பின்னர் காணும் வாழ்க்கை போராட்டத்தை, அந்த சிசுக்கள் பிறந்த நொடியில் இருந்தே துவங்கும். அப்படிப்பட்ட போராளிகளை அவமதிப்பது போன்றதொரு அறிக்கையை அளிப்பது பாக்யராஜ் போன்ற இயக்குனர்களுடைய அறிவீனத்தை அப்பட்டமாக காட்டுகிறது.

தயவுசெய்து ஒவ்வொரு குறைபிரசவ குழந்தையுடைய தாயையும், தந்தையையும், அந்த குழந்தையை பேணும் பெற்றோரையும் கேளுங்கள், அவர்கள் பட்ட வலியும், வேதனையும் புரியும் !!

FYI

PRE TERM DOESN'T MEAN PRE MATURITY ALWAYS !!

MOST OF THOSE BABIES ARE MATURED FOR THEIR GESTATIONAL AGE !!

ஒரு சிசு நல மருத்துவனாக நடிகர் பாக்யராஜ் அவர்களுக்கான எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். அப்படியே பாக்யராஜ் அவரகள் சொல்வதுபோல நாங்கள் குறைமாத பிரசவ போராளிகளாக இருப்பதில் எந்த அவமானமும் இல்லை என்பதும் எனது கருத்து!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “எனக்கு ரெண்டு கையுமே இல்ல.. நான் எப்படி கல்லெறிய முடியும்?” : குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கண்ணீர்!