Tamilnadu

தமிழகத்தை உலுக்கிய பவாரியா கொள்ளையர்கள் Operation-ஐ நினைவுகூர்ந்த முன்னாள் IPS அதிகாரி ஜாங்கிட்!

தமிழ்நாட்டில் 2005-ஆம் ஆண்டுவாக்கில் 24 கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. அனைத்து சம்பவங்களிலும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்தாலும் துப்பு கிடைக்காமல் இருந்தது.

கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வட நாட்டு கொள்ளையர்களால் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கில் டி.ஜி.பி ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார். எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தப் படையில் 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 4 கைரேகை நிபுணர்கள், 50க்கும் மேற்பட்ட பிற காவலர்கள் இடம்பெற்றனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த போலிஸார், உ.பி.யில் மீரட் என்ற இடத்தில் 2 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மீதி உள்ள 13 பேரை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 13 பேரை கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் 2 பேருக்கு தூக்குத் தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தது. இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ்வரா 2005ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க முக்கிய காரணமான முன்னாள் ஐ.பி.எஸ் ஜாங்கிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டைத் தெரிவித்திருந்தனர். இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் கரு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் எஸ்.ஆர்.ஜாங்கிட், பவாரியா ஆபரேஷனை நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக, எஸ்.ஆர். ஜாங்கிட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2006ஆம் ஆண்டு பவாரியா ஆபரேஷன் முடிந்ததும், இரவு விருந்தில் 200 அதிகாரிகள் அடங்கிய முழு போலிஸ் குழுவிற்கும் நன்றி தெரிவித்திருந்தேன். மேலும் ஒவ்வொருவருக்கும் வெள்ளிப் பலகை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அத்தகைய நினைவு எச்.சி.ரங்கநாதனின் வீட்டில் காணப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறவுமே துபாய் சென்றேன்” -முதல்வர் மு.க.ஸ்டாலின்