Tamilnadu

“இனி எல்லாமே ஏறுமுகம்தான்” : மின்சாரத் துறையில் ரூ.2,200 கோடி வருவாய் சேமிப்பு - அசத்தும் தி.மு.க அரசு!

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாட்டின் மின் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வரக்கூடிய கோடைகால மின்தேவை குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

ஆய்வின் போது அனல், புனல் மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யக்கூடிய மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அலுவலர்களிடம் மின்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மின்வாரியத்தினுடைய ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவுகளை வழங்கி, இந்த 10 மாத காலத்தில் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதின் வாயிலாக வாரியத்திற்கு ரூ.2,200 கோடி அளவிற்கு சேமிப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட திட்டமிடுதல் காரணமாக, இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.

வரக்கூடிய காலங்களில் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் சட்டமன்றத்தில் சொன்னதுபோல குறைக்கப்படும். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக ரூ.2,200 கோடி அளவிற்கு வருவாய் சேமிப்புகள் கிடைத்துள்ளது. வரக்கூடிய காலங்களில் இன்னும் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் சேமிப்புகள் வருவாயாக வழிவகை செய்யப்படும்.

அடுத்ததாக, முதலமைச்சர் அவர்கள் ஒரு லட்சம் விவாசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு கொடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த திட்டத்தின் கீழ் இதுவரை மிக சிறப்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 23.09.2021 அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் 98,157 விவசாயிகளுக்கு நேற்றுவரை இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கக்கூடிய 1,843 விவசாயிகளுக்கும் இன்னும் இரண்டு தினங்களில் மின் இணைப்புகள் வழங்கப்படும். ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு என்ற இலக்கை வாரியம் எட்டிடப் போகிறது.

அதேபோல், 8,905 புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கான பணிகளை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். 8,905 மின்மாற்றிகளும் முழுவதுமாக நிறுவப்பட்டிருக்கின்றன. அந்தப் பணிகள் 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. எனவே, முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில், வாரியத்தினால் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. நம்முடைய கோடை காலத்திற்கான மின் தேவையினை பொறுத்தவரைக்கும் தேவைக்கும், உற்பத்திக்கும் இருக்கக்கூடிய அந்த நிலையிலிருந்து கூடுதலாக மின் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

அனல் மின் நிலையங்களை பொறுத்தவரைக்கும் கடந்த ஆட்சியில் கடந்த வருடத்தில் 15,564 மில்லியன் யூனிட் மின்சாரம் அனல் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 20,114 மில்லியன் யூனிட்டுகள் அதாவது 4,507 மில்லியன் யூனிட்டுகள் அளவிற்கு கூடுதலான உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல் புனல் மின் திட்டத்திலும் கூடுதலாக மின் உற்பத்தி என பல்வேறு நிலையங்களில் நம்முடைய சொந்த உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்வற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, நிலக்கரியை பொறுத்தவரைக்கும் 72,000 டன் தேவை, 50,000 டன் ஒன்றிய அரசினால் நமக்கு வந்துகொண்டிருக்கின்றது. இதனை ஈடுகட்டும் விதமாக இந்த கோடைகாலத்தில் நம்முடைய உற்பத்தியை ஈடுசெய்வதற்காக நிலக்கரியினை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கோடைகாலத்தில் தேவைக்கேற்ப மின் உற்பத்தியும், அதேபோல் உற்பத்தியை அதிகரிக்கவும் சீரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கோடைகாலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு. அந்த உத்தரவின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவை தொடர்ந்து நடைபெறும். இன்றைய உச்சபட்ச மின் தேவையின் அளவு 17,106 மெகாவாட்டாக எட்டியுள்ளது. அதையும் நாம் பூர்த்தி செய்துள்ளோம்.

கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் திட்டம் 2019ல் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி முடித்திருந்தால் நமக்கு உரிய மின்சாரம் கிடைத்திருக்கும். கடந்த ஆட்சியில் இந்த திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நவம்பர் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கி, முழு உற்பத்தித் திறன் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக அரசினுடைய நிலங்களை பெறுவதற்கான முயற்சிகள் எடுப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மின்சார வாரியம் சார்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டு, சில மாவட்டங்களிலிருந்து இசைவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான DPR தயாரிப்பதற்காக டெண்டர் விடப்பட்டு, வரும் 31-ம் தேதி டெண்டர் நிறைவு பெறுகிறது. விரைவில் DPR தயாரிக்கப்பட்டு சூரிய மின்சக்தி திட்டம் தொடங்குவதற்கான துரித நடவடிக்கைகள் வாரியம் மேற்கொண்டுவருகிறது.

மின் உற்பத்தி திட்டங்களை பொறுத்தவரை சுற்றுச்சூழல் தன்மை கருதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாண்மிகு முதலமைச்சர் அவர்களின் இலக்கு, குறிப்பாக வடசென்னையில் ஏற்கனவே இருந்த பாதிப்புகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கி பொதுமக்களின் கருத்துக்கள்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, அவைகள் மாற்றியமைக்கப்பட்டன.

மின்னகத்தை பொறுத்தவரை நேற்றுவரை 7,11,000 புகார்கள் பெறப்பட்டு, 7,06,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 99 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் மின் நுகர்வு குறித்த புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் சென்றைடைய வேண்டும் என்தே வாரியத்தின் நோக்கம்.” எனத் தெரிவித்தார்.

Also Read: மோடி அரசு குறித்து மாநிலங்களவையில் ஜோக் சொன்ன தி.மு.க எம்.பி.. அவையில் சிரிப்பலை!