Tamilnadu

“பெற்றோரை பட்டினிபோட்ட மகனின் சொத்து பத்திரங்கள் ரத்து” : மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி சாந்தகுமாரி. இந்த முதிய தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமாக இருந்த வீடு மற்றும் 10 ஏக்கர் நிலத்தை தங்களது மகன் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளனர்.

பின்னர், சொத்துகள் அனைத்தும் தனது பெயருக்கு மாற்றப்பட்டதை அடுத்து பெற்றோர்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மகனின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத இந்த முதிய தம்பதியினர் அவர் மீது புகார் கொடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்திக்க அலுவலகம் வந்துள்ளனர்.

அப்போது அவர் இல்லாததால் இவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு இதுபற்றி அறிந்த ஆட்சியர் அவர்களை நேரில் அழைத்துப் பேசினார். அப்போது இந்த தம்பதியினர் மகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன், மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு அந்த முதிய தம்பதியினர் மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.

Also Read: “24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர வேண்டும்” : அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!