Tamilnadu

”நேற்று: ஜெ.,வை நான் பார்க்கவேயில்லை; இன்று: அவர் இறப்பதற்கு முன் பார்த்தேன்” - OPSன் முரணான வாக்குமூலம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக சம்மன் அனுப்பியதையொட்டி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஆப்போது அவரிடம் எழுப்பப்பட்ட 78 கேள்விகளில் பெரும்பாலும் தனக்கு எதுவுமே தெரியாது என்றே ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். அப்போது ஏன் விசாரணை ஆணையம் அமைக்கச் சொல்லி கேட்டீர்கள் என ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பிய போது பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் விவரங்கள் வருமாறு:

“திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான். இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை.

Also Read: ஜெ., மரண வழக்கு: ‘ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன்’ : OPS வாக்குமூலத்தில் இடம்பெற்ற ‘தெரியாது’ எத்தனை?

அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என எனக்கு தெரியாது.

டிசம்பர் 04 தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு நினைவில்லை.

டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது தனக்கு தெரியாது, ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.” எனக் கூறியுள்ளார்.

முன்னாத, நேற்றைய விசாரணையின் போது மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை எனக் கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்றைய விசாரணையின் போது அவர் இறப்பதற்கு முன்பு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவை நான் உட்பட 3 அமைச்சர்கள் பார்த்ததாக கூறியுள்ளார். இதன் மூலம் முன்னுக்குப்பின் முரணாக ஓ.பி.எஸின் வாக்குமூலம் அமைந்துள்ளதில் ஐயப்பாடில்லை.

Also Read: இணையத்தில் வைரலாகி வரும் #எதுவும்தெரியாது.. ஓ.பி.எஸ்-யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!