Tamilnadu
“உப்பைத் தின்னவங்க தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்” : பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
“திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி அனுப்புவதற்குக் கூட வக்கோ, வகையோ இல்லாமல், முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக அ.தி.மு.கஆட்சி இருந்தது.” என அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (18.3.2022) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய கட்சி அடைந்த படுதோல்வியை மறைப்பதற்காக அந்தக் கட்சி இன்றைக்கு நிராதரவாக விடப்பட்ட நிலையில், தன்னுடைய அங்கலாய்ப்புகளை இங்கே வந்து உங்களிடத்தில் பத்திரிகைப் பேட்டி என்ற வகையில் செய்தியாளர்களிடத்தில் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்.
ஜனநாயக ரீதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவை மக்கள் முழுமையாக நிராகரித்திருக்கிறார்கள் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், கழகம் பெற்றிருக்கக் கூடிய மகத்தான வெற்றி, முதலமைச்சர் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்திருக்கக் கூடிய சிறப்பான அங்கீகாரம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கிப் போய், இந்த வெற்றி இன்றைக்கு ஏதோ முறைகேடான வகையிலே பெற்ற வெற்றியைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்து, வலிந்து அவர் இங்கே பத்திரிகை பேட்டியை அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த வெற்றி கள்ள ஓட்டுகளாலே பெற்ற வெற்றி என்று சொல்லியிருக்கிறார். நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், வரலாற்றிலேயே முதன்முறையாக மிக அமைதியாக ஜனநாயக வழியில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற்றிருக்கக்கூடிய ஒரே நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் இந்தத் தேர்தல். அந்தத் தேர்தலை மிக நியாயமான முறையில் நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, அதேபோல அந்தத் தேர்தல் நியாயமான முறையில், மிகச் சரியான வகையில் ஜனநாயகப் பாதையில் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சட்டம் ஒழுங்கிற்கு ஒரு சிறு குறையோ, பங்கமோ ஏற்பட்டுவிடாத வகையில், அந்தத் தேர்தல் மிக அமைதியான முறையில் நடந்து இன்றைக்கு மாபெரும் வெற்றியை கழகமும் கூட்டணிக் கட்சிகளும் பெற்றிருக்கிறது.
அவர், இன்றைக்கு இந்தத் தேர்தலில் பல்வேறு குண்டர்கள், ரவுடிகள் எல்லாம் இறக்கி விடப்பட்டு கள்ள ஓட்டு போடுவதற்காக தயார் செய்தார்கள் என்று சொல்லுகிறார். நான் கேட்க விரும்புகிறேன், அவரது கட்சியிலிருந்து தேர்தல் வேலைகளை எல்லாம் பார்த்தவர்களையெல்லாம் அவர் அவ்வாறு குறிப்பிடுகிறாரா?
அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஒருவர், அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஜெயக்குமார் அவர்கள், எந்த வகையில் தேர்தல் காலத்தில் நடந்து கொண்டார்? அங்கே இருக்கக்கூடிய ஒரு நபரை பிடித்து, அவர் கள்ள ஓட்டு போட வந்ததாக இவர் புகார் சொன்னதை உரிய அதிகாரியிடத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய ஒருவர், அவரே போய் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது மாத்திரமல்லாமல், மனித உரிமைகளை முற்றிலுமாக மீறக்கூடிய வகையில் அந்த நபருடைய சட்டையைக் கழற்றி பின் பக்கமாக கையைக் கட்டி தெருவில் தரதரவென்று இழுத்துக் கொண்டு வருகிறார் என்று சொன்னால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய அவர், அவர் பேட்டிகளில் சொல்லக் கூடியவர்கள் எல்லாம், அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களைக் குறிப்பாக, அவருடைய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவரைத் தான் அவர் குறிப்பிடுகிறாரா என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இன்றைக்கு சட்டமன்றத்தில் கூட அவர்கள் அதைப்பற்றிய ஒரு பிரச்சனையை எழுப்பிவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள், உங்களிடத்திலும் சொல்லியிருக்கிறார். ஏதோ இந்த அரசு அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது என்று. இந்த அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பிற்கு கழகம் வந்தால், தவறு செய்திருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று. அந்த வகையில் தான், இன்று சட்டத்தினுடைய ஆட்சியின் அடிப்படையில்தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு கிரிப்டோகரன்சி என்று ஒன்று இருக்கிறது என்று சாதாரண மக்களே தெரிந்து கொண்டார்கள் என்று சொன்னால், அது அவர் வீட்டிலே நடந்த ரெய்டின் மூலமாகத் தான் தெரிய வந்திருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது வேலுமணி அவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராவதாக இருந்தாலும் சரி, வேறு மணியை நம்பாமல் கிரிப்டோகரன்சி வரை போயிருக்கிறார்கள் என்பதெல்லாம் இன்றைக்கு பொதுமக்களிடத்தில் அம்பலப்பட்டிருப்பதை, அவர்கள் பொய் வழக்கு போடுகிறார் என்று சொல்கிறார்கள்.
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டபோது போலீஸ் எந்த அளவிற்கு மனித உரிமையை நிலைநிறுத்தக் கூடிய வகையில், எவ்வளவு மரியாதையாக அவரை கைது செய்தார்கள். ஆனால், இதே அ.தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் எந்த அளவிலே கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார் என்பதெல்லாம் யாராலும் மறந்து விட முடியாத ஒன்று.
இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீட் தேர்வில் அ.தி.மு.க அரசு செய்ததைத் தான் தி.மு.க அரசு செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க அரசு என்ன செய்தது? நீட் தேர்வில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் திரும்பி வந்ததையே சட்டமன்றத்தில் மறைத்துவிட்டு, நீதிமன்றத்தில் தான் அது வெளிவந்தது. இன்னும் ஏதோ அது குடியரசுத் தலைவருடைய பரிசீலனையில் இருப்பதாகவே சட்டமன்றத்தில் ஒரு நாடகத்தை அன்றைக்கு ஆடினார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி அனுப்புவதற்குக் கூட வக்கோ, வகையோ இல்லாமல், அன்றைக்கு முதுகெலும்பு இல்லாத அ.தி.மு.க-வாக, ஆட்சியாக அது இருந்தது.
ஆனால், இன்றைக்கு நம்முடைய தலைவர் முதலமைச்சர் தலைமையில் இருக்கக்கூடிய இந்த அரசாங்கம், ஆளுநர் திருப்பி அனுப்பிய மாத்திரத்தில், உடனடியாக சட்டப்பேரவையினுடைய கூட்டத்தை சிறப்புக் கூட்டமாகக் கூட்டி, மீண்டும் அழுத்தம் தரக்கூடிய வகையில், அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறார். அனுப்பியதோடு மட்டுமல்ல, ஆளுநரை இரண்டு நாட்களுக்கு முன்பாக நேரிலே மூத்த அமைச்சர்களுடன் சந்தித்து, அதை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அழுத்தம் தந்திருக்கிறார். அவரும் அதை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், உங்களைப் போல யாருக்காகவோ பயந்துகொண்டு, நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக் கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. நாங்கள் சொன்னதைப்போல, நீட் விஷயத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், முதலமைச்சரும் உறுதியாக இருக்கிறார்கள். நிச்சயமாக இறுதி வரை அதிலே போராடி, ஒரு நல்ல முடிவைப் பெற்றுத் தருவோம் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.
கேள்வி: சென்னையில் வாக்குப் பதிவு நடக்கும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 பேர் தான். ஆனால் 6 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு சொல்கிறாரே?
பதில்: அவர் பேசுவதற்கான எந்த முகாந்திரத்தையும் அவர் கொடுக்கமாட்டார். போகிறபோக்கில் இது மாதிரியான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார். கொரோனாவுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் 6 சதவீதம் பேர் வந்திருக்கிறார் என்று சொல்கிறார். ஒட்டுமொத்தமாக அவர் ஏதோ அதை லிங்க் செய்கிற மாதிரி சொல்கிறார். அப்படி செய்திருந்தால் இன்றைக்கு நீதிமன்றங்கள் தலையிட்டிருக்கும்.
போனமுறை அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும்போது என்ன நடந்தது? எங்கெல்லாம் திமுக கூட்டணியில் இருந்தவர்கள் ஜெயித்தோமோ, அங்கே உள்ளவர்களை எல்லாம் அப்படியே நிராகரித்துவிட்டு, அதிமுக வென்றதாக அறிவித்தார்கள். அது மட்டும் கிடையாது. போன சட்டமன்றத் தேர்தலில் இதே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் திரு.அப்பாவு அவர்கள் போட்டியிட்ட ராதாபுரம் தேர்தலில் என்ன நடந்தது? இராதாபுரத்தில் திரு. அப்பாவு அவர்கள் ஜெயித்தார்.
திரு. அப்பாவு அவர்களின் வெற்றியையே மாற்றிவிட்டு அன்றைய பிரதமராக இருந்தவர் பாராட்டுத் தெரிவித்துவிட்டார் என்ற உடனேயே, அந்த வெற்றியையே அப்படியே மாற்றிவிட்டு, தோல்வி அடைந்ததாக அங்கே இருக்கக்கூடிய அதிகாரிகளை வைத்து ராதாபுரம் தேர்தல் முடிவை மாற்றி, அன்றைக்கு அதிமுக வெற்றிப் பெற்றதாக அறிவித்தார்கள். அது உச்சநீதிமன்றம் வரை சென்று, என்ன நடந்தது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, தேர்தலில் முறைகேடு பற்றி பேசுவதற்கு அடிப்படை தார்மீக உரிமையே அதிமுகவுக்குக் கிடையாது.
கேள்வி: முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக ரெய்டு நடத்தப்படுகிறது. ஆனால் எந்த ஒரு ரெய்டு தொடர்பாக சார்ஜ் ஷீட் இதுவரை போடவில்லை. சார்ஜ் ஷீட் இதுவரை போடததால் இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று…
பதில் : சார்ஜ் ஷீட் போடவில்லை என்கிறீர்கள். சார்ஜ் ஷீட் போடுவதற்கான முழு முகாந்திரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால் அந்த சோதனையின் முடிவில், FIR போடப்பட்டு சார்ஜ் ஷீட் போடுவதற்கு முன்னால், அனைத்து சாட்சிகளையும் திரட்ட வேண்டும். கலைஞர் மேலே போட்டார்களே. பாலம் தொடர்பாக, அவர் மேல் சார்ஜ் ஷீட் போட்டார்களா? சார்ஜ் ஷீட்டே கடைசி வரையில் போட முடியவில்லை. எத்தனை வருடமாக ஆட்சியில் இருந்தார்கள். 2001 முதல் 2005 வரை ஆட்சியில் இருந்தபோது கலைஞரை கைது செய்தபோது சார்ஜ் ஷீட் போட முடியவில்லை. ஆனால் நம்முடைய அரசாங்கம் இன்றைக்கு முழுமையாக நிச்சயமாக இந்தப் பணியை செய்யும்.
கேள்வி: 6 மாதங்கள் ஆகியும் சார்ஜ் ஷீட் போடவில்லையே?
பதில் : சார்ஜ் ஷீட் போடுவதற்கான முழுத் தகவல்களை திரட்டியிருக்கிறோம். ஏற்கனவே ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது. இப்போது மீண்டும் அதற்கான கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக இப்போதுகூட சோதனை செய்திருக்கிறார்கள். எனவே, முழு தகவல்கள் வைத்துத்தான் செய்யமுடியும்.
கேள்வி : 10 ஆண்டுகளில் 4.75 இலட்சம் கோடி ரூபாய் கடன் காட்டினோம், ஆனால் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் வைக்கிறாரே?
பதில் : 4.75 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றால், 10 ஆண்டுகளில் அவர்கள் எப்படி அந்தக் கடனை கொண்டு வந்தார்கள்? இப்போது பட்ஜெட்டில் என்ன வந்திருக்கிறது? இன்றைக்கு 7000 கோடி ரூபாய் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு நாம் வருவாய் பற்றாக்குறையை முதன்முதலாக எட்டு வருடத்தில் குறைத்திருக்கிறோம். Fiscal deficit 4.6 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறைத்திருக்கிறோம். எனவே, வருவாய் கணக்கானாலும் சரி, நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் சரி, முதலமைச்சருடைய தலைமையிலே ஒரு சிறப்பான நிதி நிர்வாக மேலாண்மை இருக்கக்கூடிய காரணத்தால் தான் இன்றைக்கு இந்த பட்ஜெட் மிகச் சிறப்பான பட்ஜெட்டாக வந்திருக்கிறது. எனவே, அதைப் பொறுக்கமுடியாமல் அவர் ஏதோ சொல்கிறார்.
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில், கள்ள ஓட்டு போட்டதால் தான் திமுக வெற்றி பெற்றது என்று…
பதில்: நீதிமன்றத்திலேயே, இந்தத் தேர்தல் அமைதியாக, சரியான முறையில் நடந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியை, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க-வை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள், அதனால் அவர் சொல்கிறார்.
கேள்வி: கள்ள ஓட்டு போட முயன்ற நரேஷ்குமார் மீது இதுவரை எந்த வழக்கும் போடவில்லையே?
பதில்: கள்ள ஓட்டு அவர் போட முயன்றார் என்று கிடையாது, அவர் ஒருவரை பிடித்துவிட்டுச் சொன்னார். சொன்னதற்காக அவர் மீது வழக்கு போட முடியுமா? உண்மை இருந்ததா? அவர்கள் பிடித்தார்களா? அல்லது தேர்தல் நடத்தக்கூடிய அலுவலர்கள் யாரும் ஏதாவது புகார் கொடுத்திருக்கிறார்களா? எதுவும் கிடையாது. இவர்கள் மனித உரிமையை மீறி ஒருவரைப் பற்றி, கற்பனையான சூழ்நிலையின் அடிப்படையில் புனைய முயற்சி செய்தார்கள். அதை மக்கள் முறியடித்தார்கள்.” எனப் பதிலளித்தார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!