Tamilnadu

“நண்பர்கள் கொடுத்த சீர்..” : மணமக்களை வியப்பில் ஆழ்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சையில், நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கி அவரது நண்பர்கள் அசத்தியுள்ளனர்.

திருமணத்திற்கு மணமக்களுக்கு பழம், பட்டு புடவை, நகை உள்ளிட்டவை சீராக வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தஞ்சாவூரைச் சேர்ந்த மணமக்களுக்கு நண்பர்கள் புத்தகங்களை சீராக வழங்கியுள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மோகன்குமார், காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாமுடீஸ்வரி என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது.

மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது மோகன் குமாரின் நண்பர்கள் திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை மேளம், தாளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர்.

புத்தக சீரை பெற்றுக்கொண்ட மணமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர். புத்தக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், மணமக்களுக்கு புத்தக சீர் வழங்கியது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதேபோல சமீபத்தில் புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருமண விழாக்களில் புத்தகம் சீராக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனின் நண்பர்கள் 25 ஆயிரம் மதிப்பிலான 200-க்கு மேற்பட்ட புத்தகங்களை தாம்பூல தட்டில் வைத்து சீர் வரிசை போல ஊர்வலமாக கொண்டு வந்து மணமக்களிடம் வழங்கினர்.

Also Read: “முதற்படியில் வெற்றி பெற்றிருக்கிறோம்... விரைவில் முழு வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் உறுதி!