Tamilnadu
முதல் முறையாக இந்தியாவில் FIDE செஸ் ஒலிம்பியாட் 2022.. முதல்வர் முயற்சியால் சென்னைக்கு வந்தது எப்படி?
FIDE பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
”FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக FIDE அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியினால், தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது. FIDE இன் அறிவிப்பிலிருந்து சரியாக 10 நாட்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு AICF முதலமைச்சர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அணைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு உடனே வழங்கியது.
1927 முதல் FIDE ஏற்பாடு செய்த முந்தைய 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட நடத்த வாய்ப்பு அமையவில்லை. 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2022க்கான ஏலத்தை வென்றதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.
தமிழக அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
FIDE ஆன்லைன் ஒலிம்பியாட் 2020, FIDE World Teams 2019, FIDE Online Olympiad 2021-ல் தங்கம், வெண்கலம் வென்ற மாநிலத்தின் 14 வீரர்களுக்கு, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ரொக்கப் பரிசு ரூபாய் 1 கோடியே 98 லட்சம் வழங்கி சிறப்பித்தது. இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கல் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை சென்னையில் நடைபெறும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!