Tamilnadu

“அறிவுக்கு பிணை கிடைக்க காரணமான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” : பேரறிவாளனின் தாயார் நெகிழ்ச்சி!

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார். இடைக்கால நிவாரணமாக பிணை கிணைத்துள்ள நிலையில் முழுமையான விடுதலை கிடைக்கும் என அவரது தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் அவரது தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து கடந்த மே 28-ஆம் தேதி முதல் அவர் பரோலில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பரோலில் இருந்த பேரறிவாளன் அவரது ஜோலார்பேட்டை வீட்டில் இருந்து இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டு புழல் சிறைக்கு 12 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு சிறை நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஒன்றரை மணி நேரம் கழித்து முறைப்படி ஜாமினில் வெளியே வந்தார்.

அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள், அவருடைய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வந்தனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், நீதிக்கான 31 ஆண்டு கால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது எனவும், விடுதலை என்ற முழுமையான நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த பிணை ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமது புதல்வன் உள்ளிட்ட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்ற வரை அனைவரின் ஆதரவும் அவசியம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களது போராட்டம் தொடர்வதாகவும் இதுவரையிலான காலமும் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் அமைப்பினருக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

தன்னுள் நினைவுகளாக உறைந்துவிட்ட அன்பு மகள் செங்கொடி நெஞ்சில் ஏந்தி இத்தனை ஆண்டுகளாக தமது புதல்வனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவு தந்து வரும் ஊடக நண்பர்கள், திரைப்படத்துறை நண்பர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தாய்மார்கள் பொது மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திலும் தமிழகம் தாண்டி உள்ள வெகுமக்களின் ஆதரவும் புரிதலும் 31 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த நிலையில் எட்டக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது எனவும், அவரவர் சக்திக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக இத்தனை ஆண்டுகளாக உதவியாக இருக்கும் இந்த அனைவருக்கும் தனித்தனியே சந்தித்து நன்றி கூற விருப்பம் இருப்பினும் தற்போது அது சாத்தியமற்றது என தெரிவித்தார்.

முழுமையான விடுதலை கிடைத்து அதற்கான சூழல் ஏற்படும் நாளில் விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்புக்காக நானும் அறிவும் காத்திருக்கிறோம் எனவும் எனவே தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள இந்த இடைக்கால பிணையின்போது அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிணை கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். பிணையில் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

Also Read: பேரறிவாளனுக்கு ஜாமின்... ஆளுநரின் செயலால் அதிருப்தி - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?