Tamilnadu
“மக்களே உஷார்.. இப்படியும் நூதன திருட்டு”: அடகு வைத்த நகைகளில் கைவரிசை - வசமாய் சிக்கிய வங்கி ஊழியர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில்தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த சுதா என்பவர் கிளை மேலாளராகவும், நகை மதிப்பீட்டாளராக திருப்பூரை சேர்ந்த சேகர் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இக்கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் கணக்குகளை தொடங்கி வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவரும் சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை நகல் எடுத்து வந்து கொடுத்தால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகை கடன் உதவி வழங்குவதாக கூறி வந்துள்ளார்.
அதனை நம்பிய பலரும் நகைகளை அவரிடம் கொடுத்து விட்டு தங்களது வீடுகளுக்கு சென்று மதிப்பீட்டாளர் கேட்ட ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்து நகை கடனை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் 45.527 எடை கொண்ட தங்க சங்கிலியை அடமானம் வைக்க வந்துள்ளார். அவரிடம் நகையை வாங்கி வைத்து கொண்ட சேகர் சிட்டா எடுத்து வரும்படி கூறியுள்ளார். அவர் சிட்டா எடுத்து வருவதற்குள் நகையை அடமானம் வைப்பதற்கான ரசீதை தயார் செய்துள்ளார். அதில் நகையின் எடை 44.700 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறியாத கோவிந்தராஜ் ரசீதில் கையெழுத்திட்டு கடன் பெற்று கொண்டார்.
இதனையடுத்து நேற்று நகையை மீட்ட கோவிந்தராஜ் வீட்டுக்கு கொண்டு சென்ற பொழுது நகையை பரிசோதித்த அவரது மனைவி நகையில் கொக்கி மாட்டும் சிறு சங்கிலிகள் குறைவாக உள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து கடையில் நகையை வாங்கிய ரசீதை எடுத்து பார்த்த பொழுது அதில் நகையின் எடை 45.520 என இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் வங்கிக்கு வந்து இது குறித்து வங்கி மேலாளரரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் இது குறித்து கேட்ட பொழுது நகையின் எடை குறைய வாய்ப்பில்லை என மறுத்துள்ளார்.
தொடர்ந்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதிக்கலாம் என கூறியதை அடுத்து செய்த தவறை ஒப்பு கொண்டு அதற்குண்டான தொகையை தருவதாக ஒப்பு கொண்டார். இதனிடையே நகை மதிப்பீட்டாளர் சேகரின் இந்த திருட்டு குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து ஜல்லிப்பட்டி வாவிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து காமநாயக்கன்பாளையம் போலிஸார் அங்கு விரைந்து வந்து வங்கி மேலாளர் மற்றும் சேகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட நகை கடன் பெற்ற விவசாய குடும்பத்தினர் அந்த வங்கி முன்பாக முற்றுகையிட்டு, உடனடியாக நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்ய வேண்டும். அவர் திருடிய நகைகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வாடிக்கையாளர்களிடம் போலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்ததை தொடர்ந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் சேகருக்கு மட்டும் தொடர்புள்ளதா அல்லது வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும் பங்குள்ளதா என்பதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!