Tamilnadu

”டெல்டா மாவட்டங்களை இமைப்போல காப்போம்; மண்ணை மலடாக்கும் திட்டங்களுக்கு அனுமதியோம்” - அமைச்சர் மெய்யநாதன்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் அணிவகுப்பு மரியாதையில் தமிழகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.

விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலர் அப்பூர்வா ஆகியோர் அணிவகுப்பு மரியாதையில் சிறப்பாக செயல்பட்டு தங்க பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

குடியரசு தின அணிவகுப்பில் அகில இந்திய அளவில் 4வது இடத்தை தமிழ்நாடு தேசிய மாணவர் படையினர் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. சகிப்புத்தன்மை இருந்தால் நம்மை வெல்வதற்கு யாரும் கிடையாது. தடம் மாறிச் செல்லும் இளைஞர்களுக்கு மாலுமிகளாகவும் கலங்கரை விளக்கமாகவும் தேசிய மாணவர் படை இருக்கிறது.

இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்றி தருவோம் என மேடையில் அமைச்சர் மெய்யநாதன் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், ”செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெற மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற மையம் செயல்பட்டு வருகிறது. தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

சந்தோஷ் டிராபியை வென்ற சீனியர் மகளிர் கால்பந்து அணி வெற்றி பெற்றதற்காக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது, அது விரைவில் வழங்கப்படும். ஒலிம்பிக் அகாடமிகள் 4 மண்டலங்களில் துவங்க, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கான குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிவிப்பதற்கான தகவல் மையம் விரைவில் துவங்கப்படும். திமுக ஆட்சியமைத்த மே7க்கு பிறகு தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதி கேட்டு வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்கு அனுமதி ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால், துவக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தப்படும்.

டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என முதலமைச்சர் தெரிவித்தார். அதுபோல கண்ணின் இமை போல காப்போம் என விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Also Read: நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. அதிரடி ஆக்‌ஷனில் வனத்துறை !