Tamilnadu

“பேரறிவாளனுக்கு ஜாமின் அளித்துள்ளது முழுமையான விடுதலைக்கான முன்னோட்டம்” : திருமாவளவன் வரவேற்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை அளித்துள்ளது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் இன்று பிணை வழங்கி இருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். இது அவரது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள மற்ற சிறைவாசிகளுக்கும் இதனுடைய பலன் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நீண்டகாலமாக இந்தத் தீர்மானத்தின்மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இது எம்.டி.எம்.ஏ புலனாய்வு விசாரணையில் இருப்பதால் முடிவெடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த விசாரணைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒன்றிய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு மூன்று நாட்களில் முடிவெடுப்போம் என்று ஆளுநர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு அதற்கு மாறாக குடியரசுத் தலைவர் தான் இதை தீர்மானிக்க வேண்டும் என்று பின்னர் ஆளுநர் தரப்பு தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதன் காரணமாகவே இவ்வளவு காலமாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இன்று இது தொடர்பாக விசாரணை நடைபெற்றபோது ஒன்றிய அரசின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கருணை மனுவை தீர்மானிப்பதில் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற பிரச்சனை எழுந்துள்ளது. அது தீர்வு காணப்படாமல் இதில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’ என்று வாதிட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்ற அமர்வு பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வி.சி.க சார்பில் அற்புதம் அம்மாளை அழைத்து சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தோம். அவரிடத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மனு அளித்தோம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என அவர் காரணம் காட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமே விடுதலை செய்ய முன்வரும்போது ஒன்றிய அரசு இதில் முரணான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அவர்களுக்கு 7 தமிழர்களை விடுவிப்பதில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த வழக்கில் மட்டும் இன்றி நீட் தொடர்பான வழக்கிலும்கூட இதே விதமான முரணான நிலைப்பாடுகளையே ஆளுநரும் ஒன்றிய அரசும் எடுத்து வருவது பா.ஜ.க அரசின் நோக்கத்தையும் அதன் முகவராகவே ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உள்ள நிலையில் இனிமேலும் முரண்டு பிடிக்காமல் ஒன்றிய அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை முழுமையாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பேரறிவாளனுக்கு வழங்கியது போலவே இதில் தொடர்புடைய ஏனைய சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வழக்கைப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் மாநில அரசுக்கு உள்ள தண்டனை குறைப்பு அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முற்படுகிறது. அதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "மற்றவர்களுக்கும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு” - பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?