Tamilnadu

சென்னை மேயர் அணியும் தங்க நகை.. சிவப்பு அங்கி.. செங்கோல் குறித்த வரலாறு.. சில சுவாரஸ்ய தகவல் இதோ!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நேற்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதிவிகளையும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில், தி.மு.க மட்டும் 20 மேயர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. இதில் 11 பெண் மேயர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். மேயருக்கான அங்கியை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். சென்னையின் புதிய மேயர் பிரியாவுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை வழங்கினர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கலி ஆகியவற்றின் சுவாரஸ்யமான தகவல்களை சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம். சென்னை மேயர் சிவப்பு, கருப்பு என இரண்டு நிறங்களில் அங்கி அணிவார். இதில் சிவப்பு நிற அங்கி பதவி ஏற்பு விழா, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் நிகழச்சி, குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் போன்றோர் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் போது அணிவது வழக்கம்.

மற்றொரு கருப்பு நிற அங்கியை மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டங்களின் போது மட்டுமே மேயர் இந்த நிற அங்கியை அணிந்து கொண்டு அவையை வழி நடத்துவார்.

மேலும் மேயர் அணியும் 125 தங்க சங்கிலியை 1933ம் ஆண்டு ராஜா முத்தையா செட்டியார் அன்பளிப்பாக வழங்கினார். அதேபோன்று வெள்ளி செங்கோலையும் 1933ம் ஆண்டு அவரே வழங்கினார். இந்த மரபு பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.

தற்போதுவரை இந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி கட்டத்தில் தேசியக் கொடி பறப்பதுபோல், அருகே மேயர் கொடியும் பறக்கவிடப்படுகிறது.

Also Read: மாநகராட்சி கொடி... 0001 கார்.. சென்னையை நிர்வகிக்கப் போகும் மிக இளம் வயது மேயர் பிரியா!