Tamilnadu
இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்!
சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. அந்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நாளை நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!