Tamilnadu
“சிறுவன் கலாமுக்கு அரசு சார்பில் வீடு வழங்க முதல்வர் உத்தரவு” : நாளைக்குள் ஆணை வழங்கப்படும் என உறுதி!
உலக நாடுகளுக்கு இடையே அதிகாரப்போட்டியில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மனிதன் கடைபிடிக்கவேண்டிய மனிதநேயமும் சமத்துவமும் குறித்து உலக மக்களுக்கு பாடம் எடுத்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சமீபத்தில் இணைய ஊடகத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோவில் பள்ளிச் சிறுவன் ஒருவன் மனிதநேயம் குறித்து தெளிவுடன் விளக்கி பேசியிருப்பான். மனிதநேயம் இந்த பொது சமுகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை போகிறபோக்கில் விளக்கியுள்ளான் அந்தச் சிறுவன்.
இணையத்தை ஆக்கிரமித்த சிறுவனின் பேச்சு உடனடியாக டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசக் கற்றுக் கொடுத்த பெற்றோர் குறித்தும் அறிந்துகொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர்.
பின்னர் இணைய ஊடகங்கள் அந்தச் சிறுவனை சூழந்து பேசத் தொடங்கியதும் அந்தச் சிறுவனின் குடும்பம், சென்னை கண்ணகி நகரில் வசிப்பதாகவும், இச்சிறுவனின் பெயர் அப்துல்கலாம் என்றும் சென்னையில் உள்ள கிருத்துவப் பள்ளியில்தான் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தலைமைச் செயலாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாமை அவரது பெற்றோருடன் அழைத்துப் பேசி வாழ்த்தினார். அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
மேலும் தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின் பெற்றோருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார். இணையங்களில் வைரலான சிறுவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாரட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சிறுவன் பேட்டியளித்ததால், தற்போது அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை காலி செய்யக் கூறியதாக அவரது தாயார் பேட்டியளித்திருந்தார். இந்த விவரம் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில், வீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாமை, முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட முதல்வர் அவர்கள் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று துறை அமைச்சர் என்ற முறையில் நேற்று தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.
தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கவேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்புகொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்.
பின்னர் மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!