Tamilnadu

இறுதி முடிவுகள் எப்போது வெளியாகும்? : முக்கிய தகவல் சொன்ன சென்னை மாநகராட்சி ஆணையர்!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயி ரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக 30 ஆயிரத்து 735 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு இன்றி, மந்தமாகவே இருந்தது. மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரதி மகளிர் கல்லூரி மண்டலம் 5 வாக்குப்பதிவு என்னும் மையத்தை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் அளித்த பேட்டியில், “சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டது.

தபால் வாக்குப் பெட்டிகளும், EVM வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது.

EVM வாக்குகள் ஏஜெண்டுகள் முன்னிலையில் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக அருகில் உள்ள கணினி வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.

வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் தேர்தல் அலுவலரின் அருகில் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனுமதிக்கப்படும். 2 அல்லது 3 சுற்றுகளில் வெற்றி நிலவரம் தெரியவரும். நண்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 🔴 #LIVE | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - வாக்கு எண்ணிக்கை தொடக்கம் : தி.மு.க முன்னிலை !