Tamilnadu

பினாமிகள் பெயரில் சொத்துக்குவித்த பா.ஜ.க ரவுடி... ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரும் பிரபல ரவுடியுமான சங்கர், சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (38) தனது குரு குமரனை தீர்த்துக் கட்டிய வெங்கடேசன் என்பவரை 2016ல் கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சிக்கினார்.

அதன்பின், சங்கரும் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல், மோசடி, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு, ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் பெரிய ரவுடியாக மாறினார். இவர் மீது, கொலை உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பல முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். ஜாமினில் வெளிவந்த பின், திருந்தி வாழ்வதாக கூறி வந்த சங்கர், ரியல் எஸ்டேட் தொழில், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டார். தற்போது, வளர்புரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

சங்கர், தற்போது பா.ஜ.கவில் பட்டியலின பிரிவு மாநில பொருளாளராக உள்ளார். சங்கர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

புகாரிகளின் அடிப்படையில், சங்கர் மற்றும் இவரது பினாமி வீடு, அலுவலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புக்கான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

நேர்மையான வழியில் சம்பாதித்து, இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி, சங்கருக்கு, அமலாக்கத்துறை, நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், சென்னை புறநகர் பகுதிகளில், சங்கர் தன் பினாமிகள் பெயரில் வாங்கியுள்ள, 25 கோடி ரூபாய் மதிப்பிலான 79 நிலங்களை அமலாக்கத்துறையினர் நேற்று முடக்கினர்.

Also Read: “இதுதான் தமிழ்நாடு..” : மத மோதலுக்கு வித்திட முயன்ற பா.ஜ.க பூத் ஏஜெண்டை ஒன்றிணைந்து வெளியேற்றிய கட்சிகள்!