Tamilnadu

“டேபிளுக்கு மேல பாருங்க.. அப்பதான் தெரியுவேன்” : எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் வாகையடி முனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘பிரச்சரத்தில் ஆண்களோடு அதிகமான பெண்கள் வந்துள்ளதற்கு காரணம் 50% பெண் வேட்பாளர்கள் என்பதனால்தான். தமிழக சட்டமன்றத்தை முடக்கப் போவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கிப் பார்க்கட்டும். பா.ஜ.க இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்க போவதாக பேசுகிறார்.

சட்டமன்றத்தை முடக்கி தேர்தல் வைத்தால் 200 இடங்களில் தி.மு.க மீண்டும் வெற்றி பெறும். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வார்டுக்குள் சென்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்தது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான்.

ஆட்சி அமைந்து 9 மாதம்தான் ஆகிறது. அதில் முதல் 3 மாதம் கொரோனா தொற்றால் ஓடிவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் 5 லட்சம் கோடி வாங்கி கஜானாவை காலி செய்துவிட்டனர். கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என சொன்னதை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தந்தார் முதலமைச்சர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உதயநிதி ஸ்டாலின் ஓடி ஒளிந்துவிட்டதாக கூறி வருகிறார். நீட் தேர்வுக்கான சட்ட மசோதா நிறைவேற்றும் சட்டமன்ற கூட்டத்தில், நான் சட்டமன்றத்தில் அவரின் எதிரில்தான் அமர்ந்திருந்தேன். எங்கும் ஓடி ஒளியவில்லை. இப்போது கூட உங்கள் முன்புதான் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். அவர் எப்போதும் டேபிளுக்கு மேல் பார்க்கமாட்டார். டேபிளுக்கு கீழே ஊர்ந்து சென்றுதான் பார்ப்பார்.

8 மாதத்தில் படிப்படியாக அனைத்து திட்டங்களையும் தி.மு.க அரசு செய்து வருகிறது. சிலிண்டர் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்தோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தி.மு.க சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.’ எனத் தெரிவித்தார்.

Also Read: தோல்வியின் மொத்த உருவமே பச்சைப் பொய் பழனிசாமிதான்.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!