Tamilnadu

‘நீட்’ விலக்கு : “எஜமானர்கள் என்ன சொன்னார்களோ அதன்படி செயல்படுகிறார் ஆளுநர் ரவி” - முரசொலி கடும் தாக்கு!

எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய ‘நீட்’ விலக்கு மசோதாவை, ஆளுநர் ரவி என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்பி இருக்கிறார். அவரது எஜமானர்கள் என்ன சொன்னார்களோ அதன்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அதற்கு அவர் சொல்லி இருக்கும் காரணங்களை நினைத்தால்தான் வயிறு எரிகிறது.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதா, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாம். ஆளுநர் சொல்கிறார். ஏழைகளைப் பற்றியும், கிராமப்புற மாணவர்கள் பற்றியும் இவர்களது அக்கறையை நினைத்தால்தான் புல்லரிக்கிறது. மருத்துவக் கல்விச் சேர்க்கையில், சமூகப் பொருளாதார ஏழ்மை நிலை பற்றியும், சமூக நீதியைப் பற்றியும் அவர் ஆய்வு செய்தாராம். ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் ஏழ்மை நிலைமையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு விரோதமாக இந்த மசோதா இருப்பதாகக் கண்டுபிடித்தாராம். எனவே திருப்பி அனுப்பினாராம்.

ஆளுநர் அலுவலக அறிக்கை இதனைத்தான் சொல்கிறது. ஆளுநர் சொல்லும் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைதான் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதனடிப்படையில்தான் இந்த மசோதாவே உருவாக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும், ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் 10.6.2021 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது.

நீட் தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியை பெற முடியவில்லை என்பதை புள்ளிவிபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று இக்குழு சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே- அந்த தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். அவர்கள் ஒரு மசோதாவை வடிவமைத்தார்கள். அதுதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை பற்றி அப்போதே ஆங்கில நாளேடான ‘தி இந்து’ எழுதிய செய்தி விமர்சனக் கட்டுரையில், “2021 மசோதாவில் உள்ள புதிய அம்சம், இது நீதிபதி ஏ.கே.இராஜன் அறிக்கையிலிருந்து உத்வேகம் பெறுகிறது. ஏழைகள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது ‘நீட்’ சமூக-பொருளாதார தாக்கம் குறித்து இராஜன் குழு ஆய்வு நடத்தி உள்ளது. அதன் பெரும்பகுதி மசோதாவின் முன்னுரையிலும் அதன் பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையிலும் காணப்படுகிறது: நீட் ஒரு சமமான சேர்க்கை முறை அல்ல, அது உயரடுக்கு மற்றும் பணக்காரர்களுக்கு சாதகமானது.

மேலும் அதன் தொடர்ச்சி மாநில சுகாதாரத்துறை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். கிராமப்புறங்களுக்கு போதிய எண்ணிக்கையில் விருப்பமுள்ள மருத்துவர்கள் இல்லாததால், ஏழைகள் படிப்புகளில் சேர இயலாது” என்று இதில் கூறப்பட்டுள்ளதை ‘இந்து’ ஏடு சுட்டிக்காட்டி இருந்தது. இப்படி ஏதோ ஏழைகள் குறித்து கவலைப்படுகிறாரே ஆளுநர். அவருக்கான முழுப் பதிலும் ஏ.கே.இராஜன் அறிக்கையிலேயே இருக்கிறது.

இப்படி ஏழை, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவே ஏ.கே.இராஜன் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர்களது வழிகாட்டுதல் படி ஏழை, கிராமப்புற மாணவர்கள் நலனுக்காகவே தமிழக அரசும் மசோதா நிறைவேற்றியது. எது அடிப்படையான கருத்தோ, அந்த அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் ஆளுநர் நிராகரித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு முறையை 2013 உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ‘நீட்’ விதிமுறைகளை எதிர்த்து 115 வழக்குகள் அப்போது தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. ‘நீட்’ தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு நீதிபதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்புக்கு எதிராக சங்கல்ப் என்ற தனியார் பயிற்சி நிறுவனம் வழக்கு நடத்தியது. இதில் இருந்தே இது யாருக்கு சாதகமான தேர்வு என்பது தெரியும்.

அப்போது அந்தத் தேர்வில் இருக்கும் சமூக அநீதியை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இந்தத் தீர்ப்பை ஆதரித்து தலைவர் கலைஞர் அவர்கள் அப்போது விரிவான அறிக்கை வெளியிட்டார்கள். “ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும் வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத்தேர்வு முறையையே ரத்து செய்தது கழக ஆட்சி. எனவே, நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இடமில்லை என்பதாலும் அகில இந்திய நுழைவுத்தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியமாகும் என்பதாலும் இந்த நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்க ஒன்றாகும்” - என்று 7.7.2013 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

“கழக ஆட்சி அமைந்ததும் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினை திரும்பப் பெற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழக மாணவச் செல்வங்கள் நுழைவுத்தேர்வு இல்லாமலே மருத்துவக் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்” - என்று 11.5.2016 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

அன்று தலைவர் சுட்டிக்காட்டிய வழியில்தான் இன்றைய தலைவர் - முதல்வர் செல்கிறார். ஏழைகள், கிராமப்புற மாணவர்கள் குறித்து நமக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?

Also Read: NEET - அனைத்து கட்சி கூட்டம் : ஒன்றிய அரசுக்கு பயம் காட்டும் முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்!