Tamilnadu
“மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்”: உயர்கல்வித்துறை அனுமதி- அட்டவணை வெளியிட்ட அண்ணா பல்கலை!
ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பருவத்தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுகளை எழுத உள்ளனர்.
ஆன்லைன் தேர்வுகளை எழுதக்கூடிய மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதவும் உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்கள் மற்றும் இமெயில் ஐ.டி, செல்போன் எண் போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் அதனை உறுதிச் செய்ய வேண்டும்.
மேலும் கல்லூரியில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தினை தொடர்புக் கொண்டு மாணவர்களின் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும். விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.
மாணவர்கள் எழுத்துத் தேர்வினை ஒரே இடத்தில் அமர்ந்து எழுத வேண்டும். தேர்வில் சரியான விபரங்களை மாணவர்கள் தெரிவிக்காவிட்டால் அதுகுறித்து உடனடியாக விளக்கம் கேட்கப்படும்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அனைத்து விபரங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளில் தகவல்களை தவறாக பதிவு செய்தாலோ, சிறப்பான குறியீடு ஏதாவது செய்திருந்தாலோ அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.
மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுகளில் பங்கேற்பார்கள். தேர்வு துவங்கும் நேரத்தில் மாணவர்களின் வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல், கூகுள் மீட், போன்றவற்றின் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்படும். இதனையடுத்து மாணவர்கள். A4 தாள்களில் விடைகளை எழுதவேண்டும்.
தேர்வுகள் காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ்அப், போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவற்றை தேர்வுக்குரிய பாடங்களுக்கான பேராசியர்கள் கண்காணித்து விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யச்சொல்லி பெறுவர்.
அதேபோன்று மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
மேலும் மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
மேலும் மாணவர்கள் தங்களின் விபரங்களையும், வருகைப் பதிவினையும் https://student_attdetails.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.இ.,பி.டெக்.,பி.ஆர்க். ஆகிய படிப்புகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பாடவாரியாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?