Tamilnadu

வியாபாரியை கடத்த முயற்சி.. அ.தி.மு.க மாவட்ட நிர்வாகி உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ் - பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம் வேலன் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் வாகனங்களுக்கு சீட் கவர் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பாபுவுக்கும், அ.தி.மு.க மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்விக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 19ம் தேதி பாபுவின் வீட்டிற்கு திடீரென ஏழு பேர் கொண்ட கும்பல் புகுந்து கத்தியைக் காட்டி அவரை மிரட்டியுள்ளது. மேலும் அவரை அந்த கும்பல் கடத்த முயன்றுள்ளது.

அப்போது, பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வரவே கடத்தல் கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. இது குறித்து காவல்நிலையத்தில் பாபு புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வியின் தூண்டுதலின் பேரிலேயே அந்த கும்பல் பாபுவை கடுத்த முயன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து செல்வி மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்ற 7 பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வியாபாரியை அ.திமு.க நிர்வாகி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெளிநாட்டு வேலை.. போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி - பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு : நடந்தது என்ன?