தமிழ்நாடு

வெளிநாட்டு வேலை.. போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி - பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு : நடந்தது என்ன?

சீர்காழி அருகே புத்தூரைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஆனந்தராஜ் என்பவர் போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை.. போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி - பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் கேலக்ஸி டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டு பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொத்தங்குடி வேப்பூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 98 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்வதற்காக தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீதம் பணம் செலுத்தி உள்ளனர்.

3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் வேலைக்கு அனுப்புவதாகவும் இல்லையென்றால் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஒப்பந்தத்தை ஆனந்தராஜ் செய்துள்ளார். மேலும் போலியாக சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான விசாவையும் வழங்கி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தனி பேருந்தில் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கொள்ளிடம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பா.ஜ.க கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போலி விசா வழங்கி 98 பேரிடம் 51 லட்சம் மோசடி செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories