Tamilnadu

மருமகள் பெயரில் சொத்து வாங்கி குவித்த முன்னாள் அமைச்சர்: தெலங்கானாவிலும் ரெய்டு- சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் 2016 -2021 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது தருமபுரியில் 53 இடங்கள், சேலம் மாவட்டத்தில் ஒரு இடம், சென்னையில் மூன்று இடங்கள், தெலங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 87 லட்சட்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கமும், 6,637 கிலோ கிராம் தங்க நகைகளும், 13.85 கிலோ கிராம் வெள்ளி நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் பணமும் வங்கி பெட்டக சாவி மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன் சந்திரமோகன், அவரது மருமகள் வைஷ்ணவி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.பி.அன்பழகன் தனது மருமகள் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: '600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்' - பரபரப்புத் தகவல்கள்!