Tamilnadu

“மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் சமூகஅநீதி அப்பட்டமாக கொடிகட்டிப் பறக்கிறது” : கி.வீரமணி கடும் சாடல்!

தேசிய சட்டக் கல்லூரி சேர்க்கையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு அளிக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அளிக்காத ஒன்றிய அரசின் செயலை எதிர்க்காமல் அமைதி காக்கலாமா? இதில் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு வழிகாட்டட்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்பில் மாநில அரசுகள் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 15 சதவிகிதமும், மேற் பட்டப் படிப்பிற்கு 50 விழுக்காடும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்குக் கொடுக்கப்படுவதில், ஒன்றிய சுகாதாரத் துறை இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலே இருந்த முறையை மாற்றிட உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்து, அதன்பின் முந்தைய (காங்கிரஸ்) அரசு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டு ஆணைப்படி முறையே 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம் பின்பற்றவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று நிறைவேற்றியது.

ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்பட்ட 27 சதவிகித ஓ.பி.சி. (கல்விக்கான) இட ஒதுக்கீடும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆணையைப் பற்றிக் கவலைப்படவேயில்லை.

முதன்முறையாக ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு: இடையில், பல்லாயிரக்கணக்கில் ஒடுக்கப்பட்டோருக்கு - மருத்துவக் கல்லூரிகளில் சேரவேண்டிய இட ஒதுக்கீடு, அவர்களுக்குக் கிடைக்காமலேயே சென்ற நிலையில், - தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., பா.ம.க., அ.தி.மு.க. அத்துணைக் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர) வழக்குத் தொடுத்து வாதாடியபின், பல்வேறு சால்சாப்புகளை மோடி அரசின் சுகாதாரத் துறை உச்சநீதிமன்றத்தில் கூறிக்கொண்டே வந்த நிலை மாறி, இறுதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு அச்சப்பட்டு மோடி அரசு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அடிப்படையில், இப்போது அகில இந்திய தொகுப்பில் முதன்முறையாக ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்தான் தி.மு.க.வின் மூலம் இதற்கு விடியல் கிடைத்தது: இத்தனை ஆண்டுகளில் ஓ.பி.சி பிரிவினர் இழந்த இடங்கள் பல்லாயிரம் என்றாலும், திராவிடர் கழகம் இதை முதலில் அறிக்கைமூலம் எழுதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் வீதிமன்ற, நீதிமன்ற போராட்டங்களில் ஈடுபட வைத்தது; பெரு வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தான் தி.மு.க.வின் மூலம் இதற்கு விடியல் கிடைத்தது.

ஆனால், சமூகநீதிக் காவலர் மோடியால்தான் முடிந்தது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அறிக்கை விட்டார்! தொடக்கத்தில் தான் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர் என்ற முத்திரையோடு பிரதமர் பதவிக்கு வந்தவர். அப்படி அவர் பெரு உருவம் எடுத்தால், அதை முழு மனதோடு வரவேற்பவர்கள் நாமாகவே இருப்போம் என்று அண்ணாமலைக்குப் பதில் எழுதினோம்.

மோடி அமைச்சரவையில் ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுக்குறைவு! பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரதமர் என்பதை செயலில் அல்லவா அவர் பதவிக்கு வந்தவுடன் காட்டியிருக்க வேண்டும்? இல்லையே! அவரது முதல் ஒன்றிய அமைச்சரவையும் (2014) சரி, 2019 மிகுதிப் பெரும்பான்மையிடங்களைப் பெற்று வென்ற தேர்தலுக்குப் பிறகும்கூட அவரது அமைச்சரவையில் ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகு குறைவு!

ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் சில மாநிலங்களில் தோற்றதாலும், சில மாநிலங்களில் அடுத்து வரவிருக்கும் தேர்தல்களை யோசித்தும் தனது அமைச்சரவையை மாற்றி, அதில் ஒடுக்கப்பட்டோருக்கு சற்று தூக்கலாக பிரதிநிதித்துவம் தந்த உத்தியைக் கையாண்டார் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா? நாட்டில் பரவலாக உள்ள தேசிய சட்டக் கல்லூரிகளில் (National Law Colleges) அவை தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை இட ஒதுக்கீடு சமூகநீதி அறவே புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.

இதுவரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வகுத்த நெறிப்படி கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டில் - கிடைத்தது பட்டை நாமமே என்பது வெட்கக்கேடு- கடந்த மோடி அரசின் 7 ஆண்டுகள் உள்பட. இந்தியாவில் மொத்தம் 23 தேசியப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 15 பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம் (0 0 0). ஓ.பி.சி., மாணவர்களுக்கு மோடி ராஜ்ஜியத்தில் கிடைத்தது பூஜ்ஜியமே - என்னே கொடுமை! எவ்வளவு வேதனை? தி.மு.க.வின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் பிரபல மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அவர்களும் சம்பந்தப்பட்ட சட்ட அமைச்சருக்கு இதைச் சுட்டிக்காட்டி, கடிதங்களும் எழுதியுள்ளனர். எந்தப் பதிலும் இதுவரை இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான முகப்புரை, அடிப்படை உரிமைகளில் உள்ளவற்றினைக் கூட மதிக்காது - சமூகஅநீதி அப்பட்டமாக கொடிகட்டிப் பறக்கிறது மோடியின் பா.ஜ.க. ஆட்சியில். அவர் உள்ளபடியே சமூகநீதிக் காவலர் என்றால், ஏன் இந்த அநீதிக்குப் பரிகாரம் தேட முன்வரவில்லை? அது மட்டுமல்ல; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒன்பது தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு பூஜ்யம் என தற்போது விவரங்கள் கிடைத் துள்ளன. ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் - இந்தத் தடைக் கற்களையும் தாண்டி, பொதுப் போட்டி என்ற அழைக்கப்படும் திறந்த போட்டி - அனைவரும் கலந்துகொள்ளும் போட்டியிலும் கலந்து அத்திபூத்ததுபோல ஒரு சிலர் வந்துள்ளார்கள் என்பதா நமக்கு ஆறுதல்? வெட்கம், மகா வெட்கம்.

தமிழ்நாடு அரசு - சமூகநீதிக் கண்காணிப்புக் குழு வினர் இதனை நமது முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்வதோடு, தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் போராட்டம் நடத்த ஆயத்தமாக வேண்டும். திராவிடர் கழகம் இந்த சட்டப் போராட்டத்திற்கு முதல் அடியை (FIRST STEP) எடுத்து வைக்க இருப்பதுடன், வீதிப் போராட்டமும் - கொரோனா சூழல் ஓரளவு ஓய்ந்த பின்னர் செய்திட என்றும் தயார் நிலையில் உள்ளது. அநீதியைக் கண்டு அமைதியாக இருப்பவர்களும், அந்த அநீதிக்குத் துணை போகிறவர்களும் யார்? அந்தப் பழியை ஏற்கலாமா? சமூகநீதி மண்ணான தமிழ்நாடு வழிகாட்டட்டும்.

இவ்வாறு ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.