Tamilnadu

”இதற்காகத்தான் நீட் விலக்கு கேட்கிறோம்” - நேரலையில் பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் மத்திய நிறுவன கட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி., ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எ.வ.வேலு , தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின் போது நேரலையிலேயே பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “முத்தமிழறிஞர் கலைஞர் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

“பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும்.

எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற - ஏழை - எளிய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே! தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே!

​இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

​எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: LIVE-ல் பேசும்போது திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - அசந்துப்போன பிரதமர் மோடி!