Tamilnadu

ரூ.44 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் மீட்பு.. கோயில் நிலங்களை மீட்கும் பணியில் அசத்தும் அறநிலையத்துறை!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 40 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான்புதூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 30 வருட காலமாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இதனையறிந்த இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ஜெயசந்திரன் இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நபர்களை ஆக்கிரமிப்புதாரர்களாக கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ், நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் காவல்துறையினரால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அதேபோல், வரதராஜபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே வரதராஜபுரம் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டு இருந்தது. 20 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோயில் நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருப்பது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்ததையொட்டி, இன்று அதிகாரிகள் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் உதவி கமிஷனர் மற்றும் மணிமங்கலம் போலிஸார் வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயில் மற்றும் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்தின் மதிப்பு சுமார் 4 கோடி என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை அறநிலையத்துறை அதிரடியாக மீட்டு வருவது பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Also Read: செல்போன் தராததால் ஆத்திரம்.. முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் - தூத்துக்குடி அருகே ‘பகீர்’ சம்பவம்!