Tamilnadu

விமான நிலையத்தில் ‘மஞ்சப்பை’... சுப்ரியா சாஹு IAS வெளியிட்ட வீடியோ!

‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ.

‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த இயக்கத்தின் துவக்க விழாவில், “அரசு மட்டுமே நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

மஞ்சள் பையை அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்க விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ.

சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் சென்னை விமான நிலையத்தில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய Bag அணிந்துசெல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Also Read: “சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்தான் ‘மஞ்சப்பை’.. இது அவமானம் அல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !