Tamilnadu

Google Map-ஐ நம்பி கோயிலுக்குள் நுழைந்து முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்ட லாரி ஓட்டுநர்.. நடந்தது என்ன?

நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் google map உதவியை நாடுகிறோம்.

இப்படி google map-ஐ பயன்படுத்தி பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் google map பயன்படுத்திச் சென்றதால் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

சென்னையிலிருந்து அம்பாசமுத்திரத்திற்குக் கனரக லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த கனரக லாரியின் ஓட்டுனருக்கு சரியான வழி தெரியாததால் google map-ஐ பயன்படுத்தி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். நெல்லை செல்லும் வரை சரியான வழியைக் காட்டி வந்துள்ளது google map.

பின்னர் நெல்லை சென்றபின் தவறான வழிகளைக் காட்டியுள்ளது. ஆனால் இது லாரி ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவரும் google map காட்டிய வழியிலேயே தொடர்ந்து வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பிள்ளையார் கோயில் சேரன்மாதேவி சாலையில் செல்லும்போது கோயிலுக்குச் சொந்தமான காட்சி மண்டபத்திற்குள் செல்லும் ஒருவழிப் பாதையில் லாரி சிக்கிக் கொண்டது. பின்னர்தான் தாம் தவறான வழியில் வந்து மாட்டிக் கொண்டோம் என்பதை லாரி ஓட்டுநர் உணர்ந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை மீட்டனர். பின்னர் ஒருவழிப்பாதையில் லாரியை ஓட்டி வந்ததால் அவருக்கு போலிஸார் அபராதம் விதித்தனர். பிறகு அபராத தொகையைக் கட்டிவிட்டு அங்கிருந்து லாரியை ஓட்டிச் சென்றார்.

Also Read: மார்கழி பனி காலத்தில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை.. என்ன காரணம் - வானிலை ஆய்வாளர்கள் கூறுவது என்ன?