Tamilnadu

பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தி.மு.க MLA - குவியும் பாராட்டு!

துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலனைப் பேணிக் காக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி செல்வது, சைக்கிளிங் செய்வது, உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செல்வது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி வரவேற்பைப் பெறும்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பலரும் உடலைப் பேணிக் காப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மா.சுப்பிரமணியன் அமைச்சரான பின்னரும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அசத்தி வருகிறார்.

இதேபோல தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராஜாவும் விளையாட்டு வீரராகச் சிறந்து விளங்கி வருகிறார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரான தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா, சமீபத்தில் பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் வெற்றி பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் போட்டிகள் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில், இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ராஜா. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் தற்போது வெண்கலப்பதக்கம் வென்று வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Also Read: மகளிர் துப்பாக்கிச்சூடு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு அணி; தி.மு.க எம்.எல்.ஏ மகள் சாதனை!