Tamilnadu

“தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்- இந்த அறிவிப்பு மனிதநேயத்தை காட்டுகிறது”: முதல்வருக்கு அற்புதம்மாள் கடிதம்!

ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுதிய கடிதம் பின்வருமாறு :

“ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது என்றார் மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர். ஒரு நாடு நாகரீகமடைந்துவிட்டது என்பதை, ‘சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்திவிட்டது.

சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி, முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்த்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர். இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பில் முதலமைச்சரின் அறிவிப்பு, தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.

முதல்வரின் ஆணைப்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உளவியலாளர், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், மூத்த வழக்கறிஞர், தலைமை நன்னடத்தை அலுவலர் மற்றும் சிறைத்துறை துணைத்தலைவர் என அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனிதநேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. முதல்வரின் கனிவுமிக்க இந்த மனிதநேய அறிவிப்பிற்கு, 31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பங்கள் குறித்து நன்கு அறிந்தவள், நேரடி சாட்சி என்ற முறையில் என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “உறவினர் பாலியல் வல்லுறவு; கர்ப்பமான சிறுமி” : அரசு மருத்துவரின் பொறுப்பான முயற்சி - நெகிழ்ச்சி சம்பவம்!