Tamilnadu

தலைமறைவாகப் பெங்களூரில் பதுங்கிய ராஜேந்திரபாலாஜி..? - கைது செய்ய விரையும் தனிப்படை போலிஸார்!

ராஜேந்திரபாலாஜி பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தற்போது ஒரு தனிப்படை பெங்களூருக்கு விரைந்துள்ளது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வழக்கறிஞர் முத்துப்பாண்டி ஆகியோர், அரசு வேலை வாங்கித்தருவதற்காக கூறி ரூ. 3 கோடி வரை மோசடி செய்ததாக விஜய்நல்லதம்பி என்பவர் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், ராஜேந்திரபாலாஜியின் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விருதுநகரில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திவிட்டு, அவர் தலைமறைவானார்.

ராஜேந்திரபாலாஜியை தேடிக் கண்டுபிடிப்பதற்கு போலிஸார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசியவர்களின் எண்களை போலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ராஜேந்திரபாலாஜியின் அக்கா மகன்களான ரமணா, வசந்தகுமார் மற்றும் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திரபாலாஜி பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தற்போது ஒரு தனிப்படை பெங்களூரில் முகாமிட்டுள்ளது.

மேலும் சென்னையிலும், மதுரையிலும் தனிப்படையினர் முகாமிட்டு அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். தேவைப்பட்டால் கேரளா செல்லவும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

Also Read: பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - 6 தனிப்படை தேடும் பணி தீவிரம் !