Tamilnadu

“இது ஒண்ணும் அ.தி.மு.க ஆட்சி இல்ல..” : பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க நபர் கைது!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் அரசாக தி.மு.க அரசு செயல்படுகிறது என்பதற்கு பெண் பத்திரிக்கையாளர் நெகிழ்ச்சியோடு எழுதிய ஃபேஸ்புக் பதிவே சாட்சியாக அமைந்துள்ளது.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் சமூக ஊடகங்களில் வலதுசாரி அரசியல் பேசுபவர்களின் அராஜகம் அதிகரித்தது. குறிப்பாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில், பொதுவெளியில் இயங்கும் பெண்கள் குறித்து ஆபாசமாக அருவருப்பாக பதிவு செய்யும் வேலையை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக செய்து வந்தனர்.

அதுமட்டுமல்லாது, பெண் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் அவதூறாக கொச்சையாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். மேலும் அ.தி.மு.க ஆட்சியில் கிஷோர் கே சாமி மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த நபர்கள் சிலர் தொடர்ச்சியாக பெண்களை இழிவுபடுத்திப் பேசி, சமூக வலைதளங்களிலும் அவதூறு பரப்பியபோதும் எந்த பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

அதேபோல் பெண் பத்திரிகையாளர் கவின்மலர் குறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், பத்திரிகையாளர் கவின்மலரின் புகைப்படத்தை பயன்படுத்தி பாலியல் அவதூறு செய்திருந்தார். இதனையடுத்து பாலியல் ரீதியாக அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சைபர் கிரைம் போலிஸில் கவின்மலர் புகார் அளித்திருந்தார்.

ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் அத்தகைய புகார்கள் கிடப்பில் போடாப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக பெண் ஊடகவியலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வந்த கிஷோர் கே சுவாமியை போலிஸார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

அதன்தொடர்ச்சியாக பெண் பத்திரிகையாளர் கவின்மலரின் புகைப்படத்தை பயன்படுத்தி பாலியல் அவதூறு செய்த பா.ஜ.கவைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பெண் பத்திரிக்கையாளர் கவின்மலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“Finally arrested...

சென்ற ஆண்டு பா.ஜ.கவின் வேல் அரசியலைப் பற்றி நான் எழுதிய பதிவுக்காக, சசிகுமார் என்கிற நபர் என் புகைப்படத்தை பயன்படுத்தி பாலியல் அவதூறு செய்திருந்தார். ஃபேஸ்புக் நிர்வாகத்தோடு கடும் போராட்டத்திற்குப் பிறகே அப்படங்கள் நீக்கப்பட்டன.

அது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தேன். இன்று காலை சசிகுமார் சென்னையில் கைது செய்யப்பட்டதாக சைபர் கிரைம் காவல்துறை தகவல் அளித்திருக்கிறது.

கிஷோர் கே.சாமி போன்ற நபர்களை கைது செய்ய பத்தாண்டுகள் ஆனது என்பதும் ஆட்சி மாற்றமும் அதற்குத் தேவையாய் இருந்தது என்பதை நாமறிவோம். ஒப்பீட்டளவில் இன்றைய தமிழ்நாட்டு அரசின் இந்த நடவடிக்கை வியப்பில் ஆழ்த்துகிறது. பெண்களை அவதூறு செய்தவர்கள் தப்ப முடியாது என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

இந்த விஷயத்தை கையிலெடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கோவையில் இதற்காக காவல்துறையில் தனி புகார் அளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இவ்விஷயத்தை மனித உரிமைகள் தொடர்பான புகாராக பாவித்து தலையிட்ட மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும், உடன் நின்ற பத்திரிகையாளர்கள், நண்பர்கள், என் தாய், காலஞ்சென்ற என் தந்தை என அனைவரையும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு பதிவில், “நிஜமாத்தான் நடக்கிறதா? கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். காலையில் சைபர் கிரைமில் இருந்து பாலியல் அவதூறு செய்த சசிகுமார் கைது செய்யப்பட்டதாக அலைபேசி அழைப்பு வந்தபோது நம்பவில்லை. யாரோ விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஊடக நண்பர்களிடம் சொல்லி காவல்துறையில் பேசி உண்மைதான் என அறிந்த பிறகும்கூட நம்பிக்கை வரவில்லை. அந்தளவிற்கு சென்ற பத்தாண்டுகள் அலைக்கழிக்கப்பட்டதால் வந்த நம்பிக்கையின்மை அது.

நியாயமான புகாரின்மீது எடுக்கப்படும் ஒரு சரியான நடவடிக்கையைக் கூட நம்ப முடியாத அளவிற்குத்தான் கடந்த ஆட்சி நம்மை வைத்திருந்திருக்கிறது என்பதே உண்மை. பெண்கள், பத்திரிகையாளர்கள் அளித்த இத்தகைய புகார்கள் அனைத்திலும் இப்படி நடவடிக்கை எடுப்பதோடு தண்டனையும் பெற்றுத் தந்தால், இனி ஒருவனும் இப்படிச் செய்ய துணிய மாட்டான்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு பலவேறு தரப்பினரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”நெகட்டிவ் வந்தாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்” ஒமிக்ரான் குறித்து சென்னை RGGH முதல்வர் விளக்கம்!