Tamilnadu

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகளுடன் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான வகையில் கொண்டாட்டம்!

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரியார் நினைவிடத்திலும், சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

பின்னர் கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்குச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கீழ்ப்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேராசிரியரின் உருவப்படத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, “கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளிலிருந்து கழக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது. எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும்.

இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையுமானால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

வடகிழக்குப் பருவ மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.” என அறிவுறுத்தியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதன்படி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read: “₹1கோடி முந்திரி கடத்தல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது”: அதிரவைத்த கடத்தல் சம்பவம்!