Tamilnadu

ரூ.33 லட்சம்.. 213 சவரன் நகையுடன் மாயமான சிறுவன்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?

சென்னை வண்ணாரபேட்டை மொட்டைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார். இவரது மகன் வீட்டில் எந்தநேரமும் ஆன்லைனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் சிறுவனைப் பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர்.

இதன்காரணமாக பெற்றோர்கள் மீது கோவித்துக் கொண்டு அவர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று மகன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

ஆனால், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் வீட்டிலிருந்த ரூ. 33 லட்சம் பணம் மற்றும 213 சவரன் நகையும் காணாமல் போனதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவன் பயன்படுத்திய செல்போனின் சிக்னலை ஆய்வு செய்தனர். இதில் சிறுவன் தாம்பரத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனே அங்குச் சென்ற போலிஸார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்த சிறுவனைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனின் கேம் விளையாடியதைப் பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவன் இப்படிச் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகையின் சிறு பகுதியை அடகுக்கடையில் அடகுவைத்ததும, அதேபோல் நேபாளம் செல்வதற்காக விமான விட்கெட்டுகளும் எடுத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனிடம் இருந்த பணம் மற்றும் நகையை மீட்ட போலிஸார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனுக்கு போலிஸார் அறிவுரைகளை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவன் காணவில்லை என புகார் கூறிய 24 மணி நேரத்திலேயே சிறுவனைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்த போலிஸாருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் போலிஸாரின் இந்த துரித நடவடிக்கைக்குப் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: “சத்தியம் வாங்கிய சாமியார் கணவர்.. வீட்டு தோட்டத்தில் உடலை புதைத்த மனைவி” : திடுக்கிடும் சம்பவம்!