Tamilnadu

இரவு வரை மழை பாதிப்பை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர்.. உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி!

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (13.11.2021) நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கண்ணியில் கனமழையால் வெள்ளநீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், நாகப்பட்டினம் மாவட்டம், அருந்தவம்புலத்தில் கனமழையால் வெள்ளநீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான நிதியுதவியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், இராயநல்லூர் மற்றும் புழுதிக்குடியில் கனமழை காரணமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் புழுதிக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இறுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திரு.எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி. செழியன், நாகை மாலி, ஜெ. முகமது ஷாநவாஸ், பூண்டி கே. கலைவாணன், வி. மாரிமுத்து, டி.ஆர்.பி. ராஜா, துரை சந்திரசேகர், கே. அண்ணாதுரை, என்.அசோக்குமார், டி.கே.ஜி. நீலமேகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை துறை இயக்குநர் ஏ.அண்ணாதுரை, இ.ஆ.ப., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Also Read: “விவசாயிகளை கண் போல காப்போம்... விரைவில் நிவாரணம் வழங்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!