Tamilnadu

விபத்தில் கால் இழந்த ஆந்திர இளைஞர்..செயற்கை கால் பொருத்த உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:நெகிழ்ந்த குடும்பம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி. நெசவுத் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன் (25). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சென்னைக்கு ரயில் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து விரைவு ரயிலில் நகரிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்ததில், அவரது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், மனமுடைந்த பழனி, தனது மகனுக்கு செயற்கை கால்கள் பொருத்த பல்வேறு இடங்களில் உதவி கேட்டு வந்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, முதல்வர் அவர்கள் உடனடியாக பாலமுருகனுக்கு செயற்கை கால்கள் பொருத்த, தக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு உத்தர விட்டார்.

இதைதொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பாலமுருகனுக்கு செயற்கைக் கால்கள் பொருத்த சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை நாடினார். அதன் பேரில், அந்த மருத்துவ மனையைச் சேர்ந்தமருத்துவர் நேற்று முன்தினம் பாலமுருகன் வீட்டிற்குச் சென்று செயற்கை கால்களை பொருத்துவதற்காக, அளவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து, பழனி கூறும்போது, ‘தமிழக முதல்வர், நான் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன் என்றாலும், மனித நேயத்தோடு, என்னுடைய மகனுக்கு செயற்கை கால்கள் பொருத்த கருணை உள்ளத் தோடு, ஆவன செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்’’ என்று ஆனந்தக் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்

Also Read: "மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!